மீத்தேன் வாயு திட்டம் - ஒருசுற்றுச்சூழல் பேரிடர்

ஆழ்துளைக்கிணறுகளில் இருந்து வெளியெற்றப்படும் நிலத்தடி நீர் பலவகையான மாசுகளைக் கொண்டது. கடல்நீரில் இருக்கும் உப்பைவிட சுமார் ஐந்துமடங்கு வரை அதிகமான உப்பு இதில் உள்ளது. குளோரைடு, சோடியம், சல்பேட், பை-கார்பனேட், புளூரைடு, இரும்பு, பேரியம்,மக்னீசியம்,அமோனியா,ஆர்செனிக், பலவித நீர்-கரிமப் பொருட்கள், கதிரியக்க கழிவுகள் போன்ற மாசுகளும் இருக்கின்றன. 

80ஏக்கர் நிலத்திற்கு ஒரு கிணறு அமைப்பதாக எடுத்துக்கொண்டால் சுமார் 2000 கிணறுகள் தோண்டப்படலாம். நாளுக்குசுமார் 20000 கேலன் ( 75000 லிட்டர்) நீர் ஒரு கிணற்றில் இருந்து வெளியேற்றப்படும். மாசு நிறைந்த இந்த நீரை தற்போது பாசன/வடிகால் வாய்க்கால்களாக பயன்பட்டுக்கொண்டிருக்கும் வாய்க்கால் ஆறு வலைப்பின்னலில் விட திட்டமிடுகின்றார்கள். இது மிகவும் ஆபத்தானது. நாசத்தை விலைகொடுத்து வாங்கும் இந்த மூடத்தனத்தால் ஒரு பேரிடர்,பேரழிப்பு தமிழகத்தை சூழும் அபாயம் உள்ளது.

நிலத்தடியில் உள்ள கரிம வளங்களைப் பயன்படுத்துதல் உலக நடப்புதானே - செய்தால் தொழில் பெருகுமே என்று கருதலாமா?

இது காவிரிப்படுகையை பாலைவனமாக்கி கனிமக் கொள்ளைக்கான திட்டம்.

கம்பெனி தனது மீத்தேன் எடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற கிணறுகளுக்கான இடம்,கிணறுகளை இணைக்கும் எண்ணெய் குழாய்கள், சாலைகள், கம்ப்ரெசர், வெற்றிட-பம்ப் ,ஆழ்குழாய்துளையிடும் எந்திரங்கள், அதற்கான பொருட்களை சேமிக்கும் இடம் என வளமான காவிரிப்படுகை மண் குப்பையாக மாறும். ஒரு புறம் நிலத்தடி நீரின் அழிவு. மறுபுறம் மாசுமிக்க உப்பு மிக்க கழிவுநீரின் தாக்கம். இவை காவிரிப்படுகையை பாலை நிலமாக மாற்றும். (மீத்தேன் எடுக்கும் அமெரிக்க நிலப்பகுதியில் நில நடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நிலம் உள் வாங்கவும் பிற இயற்கை சீற்றங்களுக்கும் ஆளாகியுள்ளன) இந்த திட்டத்தால் வேளாண்மையும், வேளாண் மக்கள் சமூகமும் அழிந்துபோகும்.இதையே வாய்ப்பாக்கி கீழே புதைந்துள்ள நிலக்கரியை அள்ள திட்டமிடுகின்றார்கள்.

பேரழிவு மன்னார்குடிப்பகுதியோடு நிற்காது. தமிழகமே பாதிக்கப்படும் காவிரிப்படுகையின் மன்னார்குடிப்பகுதி வறண்டுபோகும்போது, பிறமாவட்டங்களும் பாதிக்கப்படும். தொடர்புடைய நீர்தாரைகள் சேதப்படும். நிலத்தடிநீர் வேளாண்மைக்கும் குடிநீர்த் தேவைக்கும் கிடைக்காது. சென்னை முதல் இராமேசுவரம் வரை குடிநீர் தேவை நிறைவேறாது. ஒரு மகத்தான சமூகத்தின் வாழ்வாதாரமாகவும், பண்பாட்டுச் சிறப்பிடமாகவும் ,எண்ணற்ற கால்நடைகள், பறவைகள், மற்றும் உயிர் வகைகளுக்கு தாய்மடியாகவும் உள்ள செழிப்பான வேளாண் நிலத்தை எரிவாயு எடுக்க விற்பது தனது ஆடம்பரசெலவுகளுக்கு வழிகாணத்தெரியாத அற்பப் பதர் தன் தாயை விற்பதற்கு ஒப்பானதாகும். காவிரிநீரில் தமிழர்களின் உரிமையை கள்ள மௌனம் சாதித்து மறுத்து வரும் மன்மோகன் அரசு திட்டமிட்டே காவிரிப் படுகைக்கு வருகின்ற தண்ணீரைத் தடுக்கின்றதோ என்ற ஐயமும் வலுக்கின்றது.

முல்லைப்பெரியாறு, காவிரி,பாலாறு நீர் உரிமைகளை தமிழர்களுக்கு மறுக்கின்ற மன்மோகன் அரசு பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் தாய்மண்ணாக விளங்கும் காவிரிப்படுகை நிலத்தில் முழு உரிமை கொண்டாடுவதும் கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு கைமாற்றிக்கொடுப்பதும் அடிப்படைகள் அற்றவை. கோடிக்கணக்கான வேளாண் மக்கள் வேறு தொழிலை நாடட்டும் என்ற மன்மோகன் சிங் சிந்தனை நாட்டு நலனுக்கு விரோதமான ஒன்று.

நம் முன்னோர்கள் இன்னுயிர் ஈந்து பெற்றுத்தந்த விடுதலை நம்மையும் நாட்டு நலனையும் கம்பெனிகளிடம் ஒப்படைக்க அல்ல. உயிர் ஈகை தந்தேனும் தாயகம் காப்போம்.

தஞ்சை என்பது அடர்ந்த வேளாண் பகுதி. அந்த வேளாண்மை தமிழ்நாட்டின் அச்சாணிகளில் முதன்மையானது. தமிழ்நாட்டின் பொருளாதாரமும் தொடர்ந்த செழிப்பும் இதனூடே வருவன. ஒரு நாட்டின் வேளாண்மையும், தொழிலும் ஒன்றை ஒன்று அழிக்காமல் பெருக வேண்டும். ஒன்றை அடித்து ஒன்றை வளர்ப்பது, ஒரு கண்ணைப் பொட்டையாக்கிக் கொள்வதற்குச் சமம். வளர்ந்த மேனாடுகள் யாவற்றிலும் இந்தப் பண்பாட்டையும் கட்டுப்பாட்டையும் காணலாம்.





No comments:

Post a Comment