மீத்தேன் வாயு திட்டத்தை ஏன் ஏற்கக்கூடாது ?

வேளாண்மைக் களஞ்சியத்தை அழித்து கரிக்களஞ்சியம் கட்டுவது பொன்முட்டையை நிதமும் இடும் வாத்தை அறுத்து உடனடியாக நிறைய பொன்முட்டைகள் வேண்டும் என்பதற்குச் சமம் என்று கூறலாம். 

அடர்ந்த, முதன்மையான வேளாண் நிலங்களை வலிந்து கரிக்களஞ்சியமாக ஆக்குவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பலனளிக்கும். ஆனால் வேளாண் களஞ்சியமோ என்றைக்கும் பலனளித்து வந்திருக்கிறது; வரக்கூடியது.

கரிக்களஞ்சியம், தமிழ்நாட்டிற்குச் சிறிதும், பிற நாடுகள் மாநிலங்களுக்குப் பெரிதுமாகப் பலனளிக்கும். ஆனால், வேளாண் நெற்களஞ்சியமோ பெரிதாக தமிழ்நாட்டிற்கும் சிறிதாக பிற நிலங்களுக்கும் பலன் தரும். அதன் தன்மை அப்படியானது. ஆக, நெற்களஞ்சியமே 10 கோடி மக்களுக்கு அதிகம் பலன் தருவது. அந்தப் பொருளியலை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளாவிட்டால் தன் கண்ணில் தானே அமிலம் இட்டுக் கொள்வதாகவே பொருள்.

தமிழ்நாட்டிற்குப் பிற மாநிலங்கள் தரவேண்டிய நீரளவும், நீர் உரிமையும் ஆழ்ந்த வணிக அரசியலால் தடுக்கப் பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மாநிலங்களும் நாடுகளும் தமிழர்களுக்கு எதிரிகளாக உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டின் தொன்மையான செல்வங்கள் மருத வளமும், நெய்தல் வளமும் ஆகும். தமிழ்நாட்டு மருத வளம், நீர்ப்பங்கீட்டு ஓரவஞ்சனையால் வறட்சிக்குட்படுத்தப்படுகிறது. நெய்தல் வளம் சிங்களரால் சுட்டுக் கொல்லப்பட்டுச் சீரழிக்கப் படுகிறது. தமிழக் கடற்கரையைச் சுற்றிய கடற்பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களும் பன்னாட்டு வணிக அரசியலுக்குள் வந்து விட்டன.

ஆகவே, இந்த இரண்டு வளங்களையும் விட்டு விட்டால் பாலாவின் பரதேசிகளாய், அடிமைகளாய்த் தமிழ்க் குலம் மேலும் மாறிப்போகும். இதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

தற்போதைய மீத்தேன் முனைப்புகளை, மன்னார்குடியில் இருந்து வடக்காகக் கோடு கிழித்து நெய்வேலியைத் தொட்டுப் பார்த்தால் இங்கே வெட்டப் படும் கிணறுகள் இறைத்து வெளியிடும் நீர் கிழக்காகத்தானே ஓடும்? மேற்குக்கு கிழக்குதான் நம்மூரில் பள்ளம்! ஆக, தற்போது குறைவாக (80) வெட்டப்படும் கிணறுகள் வெளியேற்றும் மாசு நீர் கடற்கரை வரை எல்லாப் பயிர்களையும். எல்லா நிலங்களையும், எல்லா ஊர்களையும் ஏப்பமிட்டு விடும் என்பது உண்மைதானே? அது என்ன சிறிய நிலப் பரப்பா? நாக நாடு முழுதும் காலியாகிவிடுமல்லவா? விழித்திருந்து ஏமாறலாமா? நம் விரலைக் கொண்டு நம் கண்ணைக் குத்திக் கொள்ளலாமா?.

கரிக்களஞ்சியத்தை மறுத்து நெற்களஞ்சியத்தைக் காப்போம்!

மீத்தேன் வாயு திட்டம் - ஒருசுற்றுச்சூழல் பேரிடர்

ஆழ்துளைக்கிணறுகளில் இருந்து வெளியெற்றப்படும் நிலத்தடி நீர் பலவகையான மாசுகளைக் கொண்டது. கடல்நீரில் இருக்கும் உப்பைவிட சுமார் ஐந்துமடங்கு வரை அதிகமான உப்பு இதில் உள்ளது. குளோரைடு, சோடியம், சல்பேட், பை-கார்பனேட், புளூரைடு, இரும்பு, பேரியம்,மக்னீசியம்,அமோனியா,ஆர்செனிக், பலவித நீர்-கரிமப் பொருட்கள், கதிரியக்க கழிவுகள் போன்ற மாசுகளும் இருக்கின்றன. 

80ஏக்கர் நிலத்திற்கு ஒரு கிணறு அமைப்பதாக எடுத்துக்கொண்டால் சுமார் 2000 கிணறுகள் தோண்டப்படலாம். நாளுக்குசுமார் 20000 கேலன் ( 75000 லிட்டர்) நீர் ஒரு கிணற்றில் இருந்து வெளியேற்றப்படும். மாசு நிறைந்த இந்த நீரை தற்போது பாசன/வடிகால் வாய்க்கால்களாக பயன்பட்டுக்கொண்டிருக்கும் வாய்க்கால் ஆறு வலைப்பின்னலில் விட திட்டமிடுகின்றார்கள். இது மிகவும் ஆபத்தானது. நாசத்தை விலைகொடுத்து வாங்கும் இந்த மூடத்தனத்தால் ஒரு பேரிடர்,பேரழிப்பு தமிழகத்தை சூழும் அபாயம் உள்ளது.

நிலத்தடியில் உள்ள கரிம வளங்களைப் பயன்படுத்துதல் உலக நடப்புதானே - செய்தால் தொழில் பெருகுமே என்று கருதலாமா?

இது காவிரிப்படுகையை பாலைவனமாக்கி கனிமக் கொள்ளைக்கான திட்டம்.

கம்பெனி தனது மீத்தேன் எடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற கிணறுகளுக்கான இடம்,கிணறுகளை இணைக்கும் எண்ணெய் குழாய்கள், சாலைகள், கம்ப்ரெசர், வெற்றிட-பம்ப் ,ஆழ்குழாய்துளையிடும் எந்திரங்கள், அதற்கான பொருட்களை சேமிக்கும் இடம் என வளமான காவிரிப்படுகை மண் குப்பையாக மாறும். ஒரு புறம் நிலத்தடி நீரின் அழிவு. மறுபுறம் மாசுமிக்க உப்பு மிக்க கழிவுநீரின் தாக்கம். இவை காவிரிப்படுகையை பாலை நிலமாக மாற்றும். (மீத்தேன் எடுக்கும் அமெரிக்க நிலப்பகுதியில் நில நடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நிலம் உள் வாங்கவும் பிற இயற்கை சீற்றங்களுக்கும் ஆளாகியுள்ளன) இந்த திட்டத்தால் வேளாண்மையும், வேளாண் மக்கள் சமூகமும் அழிந்துபோகும்.இதையே வாய்ப்பாக்கி கீழே புதைந்துள்ள நிலக்கரியை அள்ள திட்டமிடுகின்றார்கள்.

பேரழிவு மன்னார்குடிப்பகுதியோடு நிற்காது. தமிழகமே பாதிக்கப்படும் காவிரிப்படுகையின் மன்னார்குடிப்பகுதி வறண்டுபோகும்போது, பிறமாவட்டங்களும் பாதிக்கப்படும். தொடர்புடைய நீர்தாரைகள் சேதப்படும். நிலத்தடிநீர் வேளாண்மைக்கும் குடிநீர்த் தேவைக்கும் கிடைக்காது. சென்னை முதல் இராமேசுவரம் வரை குடிநீர் தேவை நிறைவேறாது. ஒரு மகத்தான சமூகத்தின் வாழ்வாதாரமாகவும், பண்பாட்டுச் சிறப்பிடமாகவும் ,எண்ணற்ற கால்நடைகள், பறவைகள், மற்றும் உயிர் வகைகளுக்கு தாய்மடியாகவும் உள்ள செழிப்பான வேளாண் நிலத்தை எரிவாயு எடுக்க விற்பது தனது ஆடம்பரசெலவுகளுக்கு வழிகாணத்தெரியாத அற்பப் பதர் தன் தாயை விற்பதற்கு ஒப்பானதாகும். காவிரிநீரில் தமிழர்களின் உரிமையை கள்ள மௌனம் சாதித்து மறுத்து வரும் மன்மோகன் அரசு திட்டமிட்டே காவிரிப் படுகைக்கு வருகின்ற தண்ணீரைத் தடுக்கின்றதோ என்ற ஐயமும் வலுக்கின்றது.

முல்லைப்பெரியாறு, காவிரி,பாலாறு நீர் உரிமைகளை தமிழர்களுக்கு மறுக்கின்ற மன்மோகன் அரசு பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் தாய்மண்ணாக விளங்கும் காவிரிப்படுகை நிலத்தில் முழு உரிமை கொண்டாடுவதும் கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு கைமாற்றிக்கொடுப்பதும் அடிப்படைகள் அற்றவை. கோடிக்கணக்கான வேளாண் மக்கள் வேறு தொழிலை நாடட்டும் என்ற மன்மோகன் சிங் சிந்தனை நாட்டு நலனுக்கு விரோதமான ஒன்று.

நம் முன்னோர்கள் இன்னுயிர் ஈந்து பெற்றுத்தந்த விடுதலை நம்மையும் நாட்டு நலனையும் கம்பெனிகளிடம் ஒப்படைக்க அல்ல. உயிர் ஈகை தந்தேனும் தாயகம் காப்போம்.

தஞ்சை என்பது அடர்ந்த வேளாண் பகுதி. அந்த வேளாண்மை தமிழ்நாட்டின் அச்சாணிகளில் முதன்மையானது. தமிழ்நாட்டின் பொருளாதாரமும் தொடர்ந்த செழிப்பும் இதனூடே வருவன. ஒரு நாட்டின் வேளாண்மையும், தொழிலும் ஒன்றை ஒன்று அழிக்காமல் பெருக வேண்டும். ஒன்றை அடித்து ஒன்றை வளர்ப்பது, ஒரு கண்ணைப் பொட்டையாக்கிக் கொள்வதற்குச் சமம். வளர்ந்த மேனாடுகள் யாவற்றிலும் இந்தப் பண்பாட்டையும் கட்டுப்பாட்டையும் காணலாம்.





மீத்தேன் எடுப்பதால் நேரப்போகும் கெடுதல்கள்


விளைநிலங்கள் கரி நிலங்களாக மாறும்


நிலத்தடி நன்னீர் வறண்டு போகும்


மேலும் நன்னீர் நிலத்தடியில் வறண்டு போக, கடலோரப் பகுதி என்பதால், கடல் நீர் நிலத்தடியில் புகுந்து விடும்


இறைக்கப் படும் நீரால் சுற்றி வேளாண்மைக்காக ஓடும் நீர் நிலைகள் மாசு பட்டு பயனற்றுப் போகும்



துவக்கத்தில் 1,66,000 ஏக்கர் என்று குறிக்கப் பட்டிருக்கும் அளவில் 80 கிணறுகளையும் தோண்டி விட்டால், அந்தப் பகுதியின் நீரும் சுற்றுச் சூழலும் கெட்டு விடுவதால் மெல்ல மெல்ல வேளாண்மை மங்கும்


காவிரிப் பாசனப் பகுதி எங்கும் நிலத்தடியில் மீத்தேனும் நிலக்கரியும் இருப்பதாகக் கணித்திருக்கிறார்கள் என்பதால், 80 கிணறுகளுக்குப் பின்னர் அசுர வேகத்தில் 800, 8000 கிணறுகள் என்ற அளவில் மீத்தேன் கிணறுகள் பெருகும்


தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பெயர் பெற்றிருந்த தஞ்சை நெற்களஞ்சியம், கரிக்களஞ்சியமாக மாறும். இது தமிழ்நாட்டின் முதன்மையான வாழ்வாதாரத்தை அழித்து விடும்


மீத்தேனுக்குப் பின்னர் நிலக்கரியில் கைவைப்பார்கள். பெட்ரோலும் அங்கிருந்து வரக் கூடும்


வேளாண்மையை கைவிட்ட மக்கள் ஆரம்பத்தில் நிலங்களை விற்றுக் கிடைத்த காசில் சிறிது பகட்டாக இருந்தாலும் ஓரிரு தலைமுறைகளில் கரிக்களஞ்சியத்தின் கூலித் தொழிலாளிகளாய், பாலாவின் பரதேசி திரைப்படத்தில் வரும் பரதேசிகளாக ஆகிவிடுவர்


பசுமையான செழிப்பான மிக அகண்ட வேளாண்மைப் பகுதியில் வெட்டப்பட்ட சுரங்கங்கள், ஆழ்கிணறுகள் காலப் போக்கில் வற்றிவிட அவற்றைக் கைவிட்டு நிறுவனங்கள் வேறு தொழிலுக்குப் போய்விடும். பின்னர் “Abandoned Mines and deep wells” என்ற பெயரில் பயனற்று மண்மேடாகப் போகும். பல ஆயிரம் ஆண்டுகள் பச்சையாக இருந்த நிலங்கள் அரை அல்லது ஒரு நூற்றாண்டில் பாலையாக ஆகிப் போகும்

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் முறை

நிலக்கரி படுகை மீத்தேன் வாயு ஒரு குறிப்பிட்ட பகுதியில் செறிவாக குவிந்திருப்பது அல்ல. நிலக்கரிப் படிமத்தில் –அதன் நுண்துளைகள், வெடிப்புகளில் நிலக்கரிப்பாறைகளின் தளப்பரப்பில் ஒட்டியிருப்பது .மன்னார்குடிப்பகுதி நிலக்கரிப் படிமங்கள் தரைமட்டத்திற்கு கீழே 500 அடி முதல் 1650 அடி ஆழம் வரை காணப்படுகின்றது. தற்போதுள்ள நிலத்தடி நீர் இந்த படிமங்களை அழுத்திக்கொண்டுள்ளது. 

இந்த அழுத்தத்தினால் செறிவற்ற மீத்தேன் வாயு நிலக்கரிப்பாறைகளில் இருந்து வெளியேற முடிவதில்லை. நிலக்கரிப்பாறை மீது உள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றியதன் பின்னரே மீத்தேன் வாயு வெளிவரமுடியும். அடுத்தகட்டமாக வெற்றிடமுண்டாக்கும் கருவிகளைக்கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்றவேண்டும். 

அவ்வாறு நிலத்தடி நீர் 500 அடி முதல் 1650 அடிவரை வெளியெற்றப்படும்போது காவிரிப்படுகையின் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிகளுக்கு கீழே இறங்கிவிடுவதோடு இந்த மன்னார்குடி நிலக்கரி படுகையிலிருந்து சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு தொடர்புள்ள நிலத்தடிநீர் தொகுப்புகள் அனைத்தும் வறண்டு போகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக மிக அருகாமையில் உள்ள வங்கக்கடலின் உப்பு நீர் காவிரிப்படுகையின் உள்ளே ஊடுருவும்.காவிரிப்படுகை ஒரு உப்பளமாக மாறும் பேரழிவு நிகழும். நிலநடுக்கங்கள், மண் உள்வாங்குதல் போன்றன நிகழும் அபாயமும் உண்டு.